

பொட்டு சுரேஷ் கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அட்டாக் பாண்டி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழ கிரியின் நண்பரும், திமுக பிரமுகருமான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டார். இவர் விசாரணைக்காக 4 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆயுதப்படை மைதான வளாகத் தில் உள்ள சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் அட்டாக் பாண்டியிடம் மதுரை நகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணை யர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, ஆய்வாளர் கள் கோட்டைச்சாமி, பெத்துராஜ் ஆகி யோர் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெரிவித்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திமுக ஆட்சியின்போது வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு பொட்டு சுரேஷ்தான் காரணம். இது எனக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியது. இழந்த இடத்தை மீண்டும்பெற பகீரத முயற்சி எடுத்தபோதும், பொட்டு சுரேஷ் தடுத்துவிட்டார். அவரை மீறி என்னால் வளர முடியாத நிலை ஏற்பட்டது.
2011 சட்டப் பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைந்த பின்னர் அழகிரியிடம் பொட்டு சுரேஷ் செல்வாக்கு குறைந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் நெருங்கிச் சென்றேன். சிறிது காலம் ஒதுங்கியிருந்த பொட்டு சுரேஷ் மீண்டும் அழகிரியிடம் ஒட்டிக்கொண்டார்.
கட்சியினருக்கு பதவி பெற்றுத்தருவது உட்பட அனைத்து விஷயங்களிலும் அவரது செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து பழைய நிலையை எட்டியது. இதனால் அழகிரி யிடம் என்னால் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
கீரைத்துறை பகுதியில் உள்ள நூறுக் கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உட்பட பல தரப்பில் இருந்தும் எனக்கு மாமூல் கிடைக் கும். இப்பகுதியில் செல்வாக் குடன் இருந்தேன். இப்பகுதி யில் ஜெயம் பைனான்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட நிதி நிறுவனம் மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ய திட்டமிட்ட தகவல் தெரிந்தது. விசாரித்தபோது கோடிக்கணக்கில் பணப்புழக் கம் நடப்பது தெரிந்தது. நிதி நிறுவன நிர்வாகி அசோக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதைக் கைப்பற்றினேன்.
இப்பிரச்சினையை பொட்டு சுரேஷிடம் அசோக் கொண்டு சென்றதால் அவர் தலை யிட்டார். அசோக்கிடம் பணத்தை பெற்று பொட்டு சுரேஷ், போலீஸ் மூலம் காய் நகர்த்தி என்னை மிரட்டினார். அசோக்கை கடத்தியதாக என் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது. என்னை செயல்பட விடாமல் முடக்கி, நிதி நிறுவனத்தை கைப்பற்றினார்.
இச்சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்ததுடன் பண வருவாயை தடுத்தது. பொட்டு சுரேஷ் செல்வாக்குடன் இருக்கும் வரை நம்மால் இனி பழைய செல்வாக்குடன் வாழ்வது கஷ்டம் என்ற நிலையில் தவித்தேன்.
நான் பொட்டு சுரேஷ் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்த தகவல் அவருக்கும் தெரிந் தது. எனது நெருங்கிய உற வினர் திருச்செல்வத்துடன் எனக்கு குடும்பப் பிரச்சினை இருந்தது. இதையறிந்த பொட்டு சுரேஷ் என்னை தீர்த்துக்கட்ட திருச்செல்வம் மூலம் முயற்சித்தது தெரிந்தது.
அவர் ஆட்களை ஏற்பாடு செய்த தகவல் எனது மைத்துனர் விஜயபாண்டி மூலம் தெரிந்தது. இதை அறிந்த எனது ஆதரவாளர் கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
அழகிரியிடம் என்னை நெருங்கவிடாமல் பொட்டு சுரேஷ் தடுத்ததால் 2012 டிசம்பரில் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, அவரது ஆதரவாளராக மாறினேன். பொட்டு சுரேஷ் கொலைக்கு முன் இது குறித்த தகவல் ஸ்டாலினுக்கோ, அழகிரிக்கோ தெரிய வாய்ப்பில்லை என அட்டாக் பாண்டி விசாரணையில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இவர் கூறும் தகவல்கள் சரிதானா? என தனி விசாரணை நடக்கிறது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் துன்புறுத்தவில்லை
அட்டாக் பாண்டியை அவரது வழக்கறிஞர் என்.தாமோதரன் நேற்று மாலை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘போலீஸார் தன்னை துன்புறுத்தவில்லை என அட்டாக் பாண்டி தெரிவித்தார். நடந்ததை மறைக்காமல் கூறும்படி போலீஸார் கேட்டுள்ளனர். தொண்டை வலி இருந்ததால் சிகிச்சை அளித்துள்ளனர். மனைவி உட்பட உறவினர்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம்’ எனத் தெரிவித்தார் என்றார்.