

சென்னை பெருங்குடி ஏரி, சுமார்57 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாத ஒரே ஏரியாக இதுஉள்ளது. இந்த ஏரி, 1997-ம்ஆண்டு பெருங்குடி பேரூராட்சியின்கீழ் இருந்தபோது, பொதுப்பணித் துறை சார்பில் 30 அடிஆழத்துக்கு தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது. இதன் வடக்கு பகுதியில் உள்ள கல்வித் துறைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளைக் கட்டியுள்ளனர். இவர்கள் வெளியேற்றும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக ஏரியில் விடப்படுவதால், நீர் மாசுபடுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்றுநாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபடுவதிலிருந்து பாதுகாப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணி. இந்த ஏரியில் கழிவுநீரை விடுவதால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட உதவி ஆட்சியர் அல்லது மாவட்டவருவாய் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரி, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர், மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இக்குழு, ஏரியின் தற்போதைய நிலை, அங்கு திட்டங்கள் ஏதேனும் செயல்படுத்தப்பட்டு இருந்தால், அதன் தற்போதைய நிலை, அங்கு நீரை மாசுபடுத்துவோர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஏரியில் நீர் மாதிரியை சேகரித்து, அது குடிப்பதற்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். நீர் மாசுபட்டிருந்தால், அதை சீர் செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
மேலும் அந்த ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றவும், ஏரியை சுற்றிலும் மரங்களை நடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதானவிசாரணை அக்டோபர் 8-ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது