பேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு- மதுரை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு- மதுரை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து ஊராட்சிப் பணிகளுக்கு டெண்டர் விடும் அதிகாரத்தை ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்க வேண்டும் எனக்கேட்டு 29 ஊராட்சி தலைவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கலியுகநாதன் உள்ளிட்ட 29 ஊராட்சித் தலைவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு ஊராட்சி விதிகள்படி கிராம ஊராட்சிகளில் திட்டப்பணிகள் கிராம ஊராட்சித் தலைவர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராம ஊராட்சித் தலைவர்கள் கிராமத்திற்கு தேவையான திட்டப்பணிகள் தொடர்பாக ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம ஊராட்சித் தலைவர் மூலமாகவே டெண்டர் விடப்பட்டு பணிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற தாமதம் ஏற்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக செயல்பட்டு கிராம ஊராட்சிப் பணிகளை கவனித்து வந்தனர்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஊராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இருப்பினும் விதிப்படி கிராம ஊராட்சிப்பணிகளுக்கான டெண்டர் பணியை ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்காமல், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மூலமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் விடப்படுகின்றன.

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கே கிராமங்களில் தேவைகள் தெரியும். எனவே கிராம ஊராட்சிப் பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விடுவதற்கு தடை விதித்து, கிராம ஊராட்சிப்பணிகளுக்கு டெண்டர் விடும் அதிகாரத்தை ஊராட்சி தலைவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in