

பல கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டிஎஸ்பி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.
ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர்.
இவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு வட்டியும், முதலீட்டையும் திருப்பித் தராமல் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவரின் புகாரின்பேரில் இருவரையும் பஜார் போலீஸார் கடந்த ஜூன் 10-ம் தேதி கைது செய்தனர். நீதிமணி, ஆசிரியர் ஆனந்த் ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ரூ.145 கோடி நிதி திரட்டியதாகவும், இதில் முதலீட்டாளர்களுக்கு ரூ.95 கோடி செலுத்திவிட்டதாகவும், ரூ.50 கோடி பாக்கியுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் திரைப்படத் தயாரிப்பாளர்களான சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னையைச் சேர்ந்த ஞானவேல்ராஜா, முருகானந்தம் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரணைக்கு ஆக 20 முதல் 23-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு பஜார் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
இந்த வழக்கில் போலீஸார் தன்னை விசாரணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தனது மகாமுனி யாரித்த படத்தின் விநியோகஸ்தக உரிமைக்காக நீதிமணி பணம் கொடுத்ததாகவும், தனக்கும் மோசடிக்கும் தொடர்பு இல்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
அதனையடுத்து விசாரணையின்போது தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா நேற்று வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் அவரை ஆக.14-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும், அதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும், ஆக.14- அன்று மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று மாலை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி வெள்ளைத்துரை முன்னிலையில் தனது வழக்கறிஞர் பாரதியுடன் ஆஜரானார். மாலை நேரமாகிவிட்டதால் இன்று விசாரணைக்கு ஆஜராக டிஎஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஞானவேல் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது மகாமுனி திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கிய நீதிமணி பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எனது தரப்பில் உள்ள தகவல்களை பெற போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்று விசாரணைக்கு வரச் சொல்லியுள்ளனர் என தெரிவித்தார்.