

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. பலத்த காற்று வீசுவதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில் வடகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வடகரையைச் சேர்ந்த விவசாயி ஜாகிர் கூறும்போது, “வடகரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1500 ஏக்கரில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். வாழைத்தார்கள் அறுவடை பருவத்தை எட்டியிருந்த நிலையில், பலத்த காற்றில் ஏராளமான வாழைகள் சாய்ந்து விழுந்துவிட்டன. சுமார் 5 ஆயிரம் வாழைகள் சாய்ந்துள்ளன.
இதனால், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாழை அறுவடை பருவத்துக்கு வர ஓராண்டு ஆகும். ஒரு வாழைக்கு ரூ.250 வரை செலவாகும். ஒரு வாழைத்தார் 500 ரூபாய்க்கு விற்பனையானால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த வேதனைக்கு இடையே காற்றில் ஏராளமான வாழைகள் சாய்ந்து மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
வருவாய்த் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சேதத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.