Last Updated : 07 Aug, 2020 04:05 PM

 

Published : 07 Aug 2020 04:05 PM
Last Updated : 07 Aug 2020 04:05 PM

மூணாறில் நிலச்சரிவு: 15 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் மாயம்- மழையால் மீட்புப்பணியில் சுணக்கம்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், தற்போது வரை 15 பேர் உடல் மீட்கப்பட்டது. மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மழை, மின்சாரம் துண்டிப்பு போன்றவற்றினால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்மழை பெய்து வருகிறது. ராஜகுமாரி, ராஜாக்காடு, நயமக்காடு, கன்னிமலை, தலையாறு, வாகுவாரை, குண்டுமலை, தென்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நீர் பெருக்கெடுத்து பெரியவாரை தரைப்பாலம் வழியே ஹெட்வொர்க்ஸ் அணைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதிக நீர்வரத்தினால் இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமானது. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து தடைபட்டது.

இந்நிலையில் நேற்று இரவு ராஜமலை செல்லும் வழியில் உள்ள பெட்டிமுறி எனும் இடத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 20 குடியிருப்புகள் மண்ணிற்குள் புதைந்தன. இந்தக் குடியிருப்புகளில் பெரும்பாலும் தமிழகத் தொழிலாளர்களே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 நாட்களாகவே இப்பகுதி தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதையும் அடைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணிக்குத் தான் வெளியில் பலருக்கும் தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து மீட்பு வாகனங்கள் இப்பகுதிக்கு விரைந்தன. ஆனால், சம்பவ இடத்திலேயே 15 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தது தெரியவந்தது.

50-க்கும் மேற்பட்டோர் மண்ணிற்குள் புதைத்திருக்கலாம் என்று போலீஸார் அச்சம் தெரிவித்தனர். இவர்களை மீட்பதற்கு தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேகமூட்டம் அதிகமாக இருப்பதால் ஹெலிகாப்டரையும் பயன்படுத்த முடியவில்லை.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பெரியவாரைப் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு மீட்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

தொடர்ந்து மழை பெய்து வருவதுடன் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 4 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு குழு சம்பவ பகுதையை அடைந்துவிட்டதாகவும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x