குமரிக் கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் அனுப்பித் தேடுக: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குமரிக் கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் அனுப்பித் தேடுக: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

குமரிக் கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டரை அனுப்பித் தேட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்த சதீஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இக்னேசியஸ் என்ற மீனவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை ஒரு மணியளவில் படகில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை சக மீனவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தேங்காய்பட்டினம் துறைமுகப்பகுதியில் மீனவர்கள் கடலில் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.

மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதி செய்யக்கோரி பலமுறை அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்கும் வகையில் வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதியை குமரி மாவட்டம் அல்லது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தவும், மாயமான மீனவர் இக்னேசியஸை மீட்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் , கடலில் 12 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மாயமானால் மாநில அரசு தான் தேட வேண்டும். அதற்கு அப்பால் விழுந்தால் மட்டுமே மத்திய அரசு தேடுதல் பணியை மேற்கொள்ள முடியும். மீனவர் இக்னேசியஸ் மாயமானது தொடர்பாக தற்போது வரை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஹெலிகாப்டரை அனுப்பி மாயமான இக்கேனசியஸை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஆக. 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in