

உலகத்தையே இன்று ஆட்கொண்டுள்ளது கண்ணுக்குப் புலப்படாத கரோனா வைரஸ். இதைத் தடுக்க அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒருபுறம் இந்த வைரஸால் விவசாயம், வணிகம், சிறுதொழில் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
சாமானிய மக்கள் பலர் ஒருவேளை உணவுக்கே போராடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், சாலையோரங்களில் சுற்றித் திரிபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் நிலை இன்னும் கொடுமை. இதுபோன்ற நிலைகளை அறியும் தன்னார்வலர்கள் பலர், பாதிக்கப்படுவோருக்கு உணவளித்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஹரிகிருஷ்ணன், உறவினர்களால் கைவிடப்பட்டு சாலைகளில் வசிப்போர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒருவேளையேனும் நல்ல உணவு பரிமாற வேண்டும் என்ற நோக்கில், தன் சொந்த முயற்சியில் வாரம் ஒருமுறை உணவளித்து வருகிறார்.
இது தொடர்பாக அவரிடம் பேசும்போது, "படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால், விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். மேலும், கோவையில் உள்ள பிரபல தடகள விளையாட்டுப் பயிற்சியகத்தில் பயிற்சியாளராகவும் உள்ளேன். இவ்விரு பணிகளில் கிடைக்கும் சொற்ப வருவாயில், ஒரு பகுதியை இதற்காகச் செலவிட்டு வருகிறேன்.
பெற்றோர் உதவியுடன் வீட்டிலேயே சமைத்து எடுத்துச் சென்று 25 பேருக்குக் கொடுத்தேன். முதல் 5 மாதங்கள் தனியாகச் செய்து வந்தேன். பெற்றோராகிய வேலுமணி, மகேஷ்வரி பெயர்களின் முதல் எழுத்தை வைத்து, வி.எம்.பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 10 மாதங்களாக இப்பணியைச் செய்து வருகிறேன்.
எனது பதிவுகளை சமூக வலைதளங்களில் கண்டு, நண்பர்கள் யுவராஜ், தினேஷ், காட்வின் ஆகியோர் உணவுப் பொருட்களைச் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொண்டு சென்று வழங்குவது உட்பட வெவ்வேறு வகையில் உதவி வருகின்றனர். தன்னார்வலர்கள் சிலரும் தங்களுக்கு முடிந்த நிதி உதவியை அளிக்கின்றனர்.
ஆரம்பத்தில், கோவை மாநகர் ஒண்டிப்புதூர் முதல் பேரூர் வரை 25 பேரைக் கண்டறிந்து உணவு வழங்கி வந்தேன். இப்போது, காந்திபுரம், சாயிபாபா காலனி, ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் 200 பேரைக் கண்டறிந்து, வாரம் ஒரு முறை, ஒருவேளை வீட்டு உணவை வழங்கி வருகிறோம்.
அவ்வாறு செல்லும்போது, உறவினர்களால் கைவிடப்பட்டோர் சிலர், எங்கள் தகுதிக்கேற்ப வேலை இருந்தால் வாங்கித் தர முடியுமா எனக் கேட்கின்றனர். அவர்களுக்கான வேலையை வாங்கித் தரவும் முயற்சி செய்து வருகிறோம்.
மேலும், 'இளைஞர் கையில் இந்தியா' என்ற மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூற்றுப்படி, தற்போது கோவை வீதிகளில் மரக்கன்று நடுவது உள்ளிட்ட பணிகளையும் தொடங்கியுள்ளோம்.
கோவை மாவட்டம் முழுவதும், உறவினர்களால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு வேளையேனும் நல்ல உணவு வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்றார்.