

தமிழகத்தில் தற்போது இ-பாஸ் எளிமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஆட்சியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை இன்று தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அரசு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதால் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குணமடைந்தோர் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் அதிகம். இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. படுக்கை வசதிகளும் உள்ளன. நோயாளிகளுக்கு தொய்வின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் முகாம்களை நடத்தி நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம்.
கட்டுப்பாட்டுப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வேளாண் பணிகளும், 100 நாள் வேலை திட்டப் பணிகளும் 100 சதவிகிதம் நடைபெற்றது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் அரசு பார்த்துக்கொண்டது. மகளிர் குழுக்களுக்கு தடையின்றி கடன் வழங்கப்படுகிறது. இதனால் மகளிரின் வாழ்வாதாரமிம் பாதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் தற்போது இ-பாஸ் எளிமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஆட்சியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்க ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குழு செயல்பட்டுவந்த நிலையில் மேலும் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற பொறியாளர்கள் 5 பேர் அடங்கிய குழு, மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரையின்பேரில் தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் மழைநீர் வீணாகாமல் இருக்க ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டும் 3 ஆண்டுகாலத்துக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில் அதிகம். கடந்த 2011-ம் ஆண்டில் 32 சதவிகிதம்பேர் உயர்கல்வி கற்றனர். இப்போது அது 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. பல்வேறு தொழில்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகளும், பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. குடிமாரமத்து திட்டத்தில் பல்வேறு நீர்நிலைகள் தூரவாரப்பட்டுள்ளன. ஆலங்குளம், சங்கரன்கோவிலில் அரசு கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் 4-ம் கட்ட பணிகளுக்கு ரூ.160 கோடியை ஒதுக்கி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது நில எடுப்புப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதனால் இத் திட்டம் இவ்வாண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
திருநெல்வேலியிலுள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் ரூ.21 கோடியில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவி வழங்கப்படவுள்ளது. இங்குள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான மாணவர் எண்ணிக்கை 150-ல் இருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.