

தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ஆக.7, 2018 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இந்நிலையில், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "வள்ளுவருக்குச் சிலை வடித்தும், வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ்ச் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்" எனப் பதிவிட்டுள்ளார்.