Last Updated : 07 Aug, 2020 12:08 PM

 

Published : 07 Aug 2020 12:08 PM
Last Updated : 07 Aug 2020 12:08 PM

அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.

சங்கீதா

மதுரை 

குடிமைப்பணியில் இருந்தால் மட்டுமே சமூகத்தில் அதிகப்படியான ஏழை மக்களுக்கு உதவ முடியும் என்பதால் விடாமுயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று சாதித்ததாக பெண் எஸ்.ஐ எஸ்.சங்கீதா தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்டம், பெல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவலிங்கசாமி- கோதைநாயகி தம்பதி ஒரே மகள் எஸ்.சங்கீதா இந்தியளவில் 499-வது ரேங்கில் தேர்வாகியுள்ளார்.

இவர் 2014-ல் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் படித்தார். வேளாண்மை தொடர்பான பணிக்கான முயற்சியைக் கைவிட்டு இந்திய ஆட்சிப் பணியில் உயர்ந்த பதவிக்குச் சென்று ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தில் போட்டித் தேர்வுக்கு தயாரானார்.

போட்டித்தேர்வு மூலம் 2017-ல் எஸ்பிஐ வங்கியில் வேளாண் அலுவலராக பணியில் சேர்ந்தாலும், அதில் நீடிக்க விருப்பமின்றி, ராஜினாமா செய்து, மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கத் தொடங்கினார்.

2019-ல் காவல்துறைக்கான விரல் ரேகை பிரிவு நேரடி எஸ்ஐ தேர்வில், தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். ஆனாலும், அதை தற்காலிகமாகவே கருதிய அவர், 2019-ல் அடுத்தடுத்து நடந்த குரூப்-1, சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதினார்.

இதில் குரூப்- 1 தேர்வில் டிஎஸ்பியாக தேர்வாகி, தற்போது சென்னையில் பயிற்சியில் இருக்கும் சங்கீதா, சிவில் சர்வீஸ் தேர்விலும் தேர்வாகியது அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்பதோடு அவரது பெற்றோர், கிராமத்திற்கும் பெருமை சேர்த்ததாகக் கூறுகிறார்.

மேலும், அவர் கூறியது: எனது கனவெல்லாம் இந்திய குடிமைப்பணி. இதில் மட்டுமே சமூகத்தில் அதிகப்படியாக வெகுஜன மக்களை சென்றடையும் வகையில் சேவை புரிய முடியும். சாதாரணப் பணியில் இருந்தால் முடியாது என்பதால் அதை நோக்கி இலக்கு நிர்ணயித்தேன்.

என்னைப் பார்த்து அடுத்த தலைமுறை வரவேண்டும். அவர்களுக்கு நான் பாதையாக இருக்கவேண்டும் என நினைத்தேன். இதற்காக எஸ்.ஐ., பணியைத் தவிர்த்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயிற்சி பெற்றேன்.

பயிற்சி மையத்திலும் திட்டமிட்டு சேர்ந்து படிக்கவில்லை என்றாலும் சில பயிற்சி மையங்கள் மூலம் மாதிரி தேர்வுகளை அதிகம் எழுதினேன். 5-வது முயற்சியில் வெற்றி பெற்றாலும், சாமானிய விவசாயின் மகள் என்பதில் பெருமைப்படுகிறேன். எனது முயற்சிக்கு பெற்றோர், நண்பர்கள் உதவியாக இருந்தனர்.

இத்தேர்வுக்கு தயாராகும் எல்லோருக்கும் பாடத்திட்டம் தெரியும். ஆனாலும், படிக்க தொடங்கும்போது, தெளிவான முடிவை எடுக்கவேண்டும். விடாமுயற்சி, திட்டமிடல், நம்பிக்கையோடு முயன்றால் இலக்கை அடையலாம். உயர்த்துக்கு செல்லவேண்டும் என நினைத்தால் போகலாம்.

ஐபிஎஸ் சர்வீஸ் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காவிடின் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எனது பணியை முழுமையாக அர்ப்பணிப்பேன், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x