கனமழையால் அடியோடு சாய்ந்த வாழைகள்: அரசின் நிவாரணத்துக்காகக் காத்திருக்கும் கோவை விவசாயிகள்

மாவூத்தம்பதி கிராமத்தில் சேதமடைந்த வாழை.
மாவூத்தம்பதி கிராமத்தில் சேதமடைந்த வாழை.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் கடுமையான பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குலைதள்ளிய வாழைகள் லட்சக்கணக்கில் அடியோடு சாய்ந்திருப்பது விவசாயிகளைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 3 நாட்களாகக் கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோரக் கிராமங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அட்டப்பாடி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழைப் பொழிவு இருப்பதால் பவானி மற்றும் நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தச் சூழ்நிலையில் கடந்த 3 தினங்களாக அடித்த பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளன.

மதுக்கரை ஒன்றியத்தில் வரும் மாவூத்தம்பதி பஞ்சாயத்தில் மட்டும் 90 சதவீதம் விவசாயிகள் வாழைதான் பயிரிட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்த மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள்.

வாழைகள் எல்லாமே குலைதள்ளி அடுத்த ஒரு மாத காலத்திற்குள் அறுப்புக்கு வந்திருக்க வேண்டியவை. ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைகள் எனக் கணக்கிட்டால் 70- 80 லட்சம் வாழைகளுக்கு மேலிருக்கும்; சரியாகக் கணக்கெடுத்தால் 1 கோடியைக்கூட தாண்டும் என்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள். சந்தையில் பொதுவாக ஒரு வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை போகும் என்பதால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதியான சண்முகம் கூறும்போது, ''கடந்த 2005, 2009-ம் ஆண்டுகளில் பலத்த காற்று காரணமாக இப்பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் சேதமாகியிருக்கின்றன. 2014-ல் வீசிய சூறைக்காற்றில் இந்தப் பகுதியில் உள்ள அத்தனை வாழை மரங்களும் சரிந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டுவதே இல்லை.

இந்த முறையும் வேளாண் அலுவலர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் வந்து பார்த்திருக்கிறார்கள். ஒரு வாழை மரத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.20 நஷ்ட ஈடு தரச் சொல்லிக் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இந்த முறையாவது எங்கள் இழப்பின் வீரியத்தை உணர்ந்து அரசு உதவி செய்யும் என்று நம்புகிறோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in