Published : 07 Aug 2020 11:26 AM
Last Updated : 07 Aug 2020 11:26 AM

தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை மோசடிக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை மோசடிக்கு முடிவு கட்ட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.7) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை கணிசமாக குறைத்திருப்பதால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் அனைவரும் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா வைரஸைக் காரணம் காட்டி பால் உற்பத்தியாளர்களை தனியார் பால் நிறுவனங்கள் கூடுதலாக சுரண்டுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தினமும் ஒன்றரை கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைகளுக்குப் போக ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சராசரியாக 30 லட்சம் லிட்டரும், தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி லிட்டரும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனத்தின் மூலம் ஒரு லிட்டர் எருமைப்பால் 41 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பாலின் அடர்த்திக்கு ஏற்றவாறு கொள்முதல் விலை சற்று மாறுபடும்.

தனியார் நிறுவனங்கள் பாலின் அடர்த்திக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.28 முதல் ரூ.36 வரை கொள்முதல் விலையாக வழங்கி வந்தன. ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஏற்பட்ட மந்த நிலையை காரணம் காட்டி, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை தனியார் நிறுவனங்கள் குறைத்து விட்டன. இப்போது தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே விலையாகத் தருகின்றன.

தமிழ்நாட்டில் பாலுக்கான தேவை எந்த வகையிலும் குறையவில்லை. பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் விலையை குறைக்கவில்லை. அதேபோல், தனியார் நிறுவனங்கள் விற்பனை விலையையும் குறைக்கவில்லை. இன்னும் கேட்டால் ஆவினை விட தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகமாகும்.

இத்தகைய சூழலில், தனியார் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.11 வரை குறைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தங்களைத் தவிர வேறு யாரிடமும் பாலை விற்க முடியாது என்ற சூழலை பயன்படுத்திக் கொண்டு, பாலுக்கான கொள்முதல் விலையை கட்டுப்படியாகாத அளவுக்குக் குறைப்பது வணிக அறம் அல்ல; இது ஒருவகையில் மோசடியும் கூட. தனியார் நிறுவனங்களின் பேராசையால் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அண்மைக்காலங்களில் கடுமையாக உயர்ந்து விட்டன. அதனால், ஒரு லிட்டர் பாலுக்கான உற்பத்திச் செலவு ரூ.25-க்கும் அதிகமாகி விட்ட நிலையில், ஒரு லிட்டர் பாலை ரூ.18 என்ற அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்வதை பால் உற்பத்தியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள், பாலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல் தரையில் கொட்டிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதை போராட்டமாக பார்க்காமல், அவர்களின் விரக்தியை வெளிப்படுத்தும் செயலாக தமிழக அரசு பார்க்க வேண்டும்; அவர்களின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் ஆவின் நிறுவனம் அதன் தினசரி கொள்முதல் அளவை 29.50 லட்சம் லிட்டரில் இருந்து 40 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆவின் பால் பதன ஆலைகளின் கொள்ளளவுக்கு அதை விட கூடுதலான பாலை கொள்முதல் செய்ய முடியாது என்பதால், ஆவினால், பால் உற்பத்தியாளர்களுக்கு அதற்கு மேல் உதவி செய்ய முடியவில்லை.

கரோனா வைரஸ் பரவலால் பால் உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் கருணை காட்ட வேண்டிய தனியார் பால் நிறுவனங்கள், அதற்கு மாறாக அவர்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

இந்த அநீதியை தடுத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆவின் நிறுவனம் எந்த விலைக்குப் பாலை கொள்முதல் செய்கிறதோ, அதே விலைக்குத் தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் செய்வதையும், அதன் மூலம் பால் உற்பத்தியாளர்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x