

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள் ளது. மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப் பகுயில் 38 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 32 மி.மீ., அடவிநயினார் கோவில் அணையில் 31 மி.மீ., செங்கோட்டையில் 22 மி.மீ., தென்காசியில் 17 மி.மீ., கடனாநதி அணையில் 16 மி.மீ., ராமநதி அணையில் 8 மி.மீ., ஆய்க்குடியில் 7.20 மி.மீ. மழை பதிவானது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்து 58 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 70 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து 51.51 அடியாக இருந்தது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 100 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
குற்றாலம் மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நேற்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின்றி குற்றாலம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கன்னியாகுமரி
பேச்சிப்பாறை அணைக்கு 977 கனஅடி வரத்தாகிறது. நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணிக்கு 780 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்துள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 8.4 அடியாக உயர்ந்தது. கடும் கடல் சீற்றம் நிலவியதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
பெருஞ்சாணியில் 30 மிமீ, பூதப்பாண்டியில் 14, சிற்றாறு ஒன்றில் 16, கன்னிமாரில் 21, கொட்டாரத்தில் 26, குழித்துறையில் 14, பேச்சிப்பாறையில் 11, புத்தன் அணையில் 29, சுருளகோட்டில் 26, மாம்பழத்துறையாறில் 21, கோழிப்போர்விளையில் 12, ஆரல்வாய்மொழியில் 10, அடையாமடையில் 12, முள்ளங்கினாவிளையில் 28, ஆனைகிடங்கில் 15 மிமீ., மழை பெய்திருந்தது. திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது.