

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ஆக.7, 2018 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இந்நிலையில், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, அண்ணா நினவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
கரோனா அச்சம் காரணமாக, இந்நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அனைவரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், நினைவிடத்தை சுற்றி வந்த அவர்கள், கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தி சிறிது தூரம் அணிவகுப்பு சென்றனர்.
பின்னர், மு.க.ஸ்டாலின் கரோனா முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பாதுகாப்பு உபகரணங்களை கருணாநிதியின் நினைவிடத்தில் வழங்கினார்.