

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக நேற்று அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக பலத்த மழையும், பிற பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.
ஏராளமான மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால், உதகை நகரில் 2 நாட்களாக மின் விநியோகம் தடைப்பட்டது. குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
உதகை அருகேயுள்ள தீட்டுக்கல் பகுதியில் மரம் விழுந்ததில் 3 வளர்ப்பு எருமைகள் உயிரிழந்தன. முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட குந்தா, எமரால்டு, கன்னேரி மந்தனை பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, "தற்போது 25 முகாம்களில் 900 பேர் தங்கவைக்கப்பட்டு, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பேரிடர் மீட்புக் குழுவினர் குந்தாவில் முகாமிட்டு, சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். அவலாஞ்சியில் கண்காணிப்புப் பணிக்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மின் விநியோக சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனினும், விரைவில் மின் விநியோகம் சீரமைக்கப்படும்" என்றார்.
கனமழை நீடிக்க வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவக் காற்று தீவிரமடைந்துள்ளது. அதனால் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்து வருகிறது. அங்கு, அதிகபட்சமாக 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பெய்த மழையில் இதுவே அதிகபட்ச அளவாகும்.
அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றார்.
பில்லூர் அணை திறப்பு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ள நிலையில், இன்று முதல் உபரிநீர் வெளியேற்றப்படவுள்ளது.