Published : 07 Aug 2020 07:10 AM
Last Updated : 07 Aug 2020 07:10 AM

புதுச்சேரியில் 12 தொகுதிகளை குறிவைக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை

புதுச்சேரியில் 12 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் குறிவைத்து 10 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் பணிகளை விரைவாக மேற்கொள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் செயல்பாட்டை வேகப்படுத்த புதிய நிர்வாகிகளையும் அண்மையில் அவர் நியமித்துள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரியில் 12 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் குறிவைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

புதுச்சேரியில் படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி, எந்தக் கட்சியும் தொடர்ச்சியாக வெற்றிபெற முடியாத தொகுதி என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களின் அடிப்படையில் பாகூர், முத்தையால் பேட்டை, மாஹி, காரைக்கால் வடக்கு உள்ளிட்ட 12 தொகுதிகள் மக்கள் நீதி மய்யத்துக்கு சாதகமான தொகுதிகளாக பட்டியல் தயாரித்துள்ளோம். இவற்றில், 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அமைந்தாலும் தேர்வுசெய்த 12 தொகுதியை எந்தக் கட்சிக்கும் விட்டு தரபோவதில்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். தற்போது புதுச்சேரியில் உள்ள 2 பிரதான கட்சிகளில் ஒரு கட்சியுடன் கூட்டணிபேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். ஒருவேளை கூட்டணி அமையாவிட்டால் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம். தேர்வு செய்த 12 தொகுதிகளில் தற்போதில் இருந்தே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம்.

புதுச்சேரியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் தொகுதிக்கு 10 ஆயிரம் வாக்குபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு மாதம் புதுச்சேரியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காலியாக உள்ள பாகூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் போட்டியிட தயாராக உள்ளோம் என்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x