Published : 07 Aug 2020 07:07 AM
Last Updated : 07 Aug 2020 07:07 AM

புழுதிவாக்கம் சித்தேரி ஏரியை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்யகுழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை புழுதிவாக்கம் சித்தேரி ஏரியில் கலக்கப்படும் கழிவுநீர். (கோப்புப் படம்)

சென்னை

புழுதிவாக்கம் சித்தேரி ஏரியை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புழுதிவாக்கம் சித்தேரி ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுவதால் அந்த ஏரிமாசடைகிறது, ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதன் பரப்பும் குறைந்து, குப்பைகளும் அதிக அளவில் கொட்டப்படுகின்றன.

இந்த ஏரியில் மாநகராட்சி சார்பில் ரூ.2.44 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டாலும், கழிவுநீர் விடுவதை தடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசியபசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில், சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர்நிலைகள் குடிநீர் ஆதாரமாக விளங்குவது மட்டுமல்லாது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாகவும் திகழ்கின்றன. நீர்நிலைகளை மாசுபடுவதில் இருந்தும், ஆக்கிரமிப்புகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று மாநில அரசு நிர்வாகங்கள், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வுகள் பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

எனவே சென்னை மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி ஆட்சியர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரி, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரப் பிரிவு கண்காணிப்பு பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, ஏரிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு புழுதிவாக்கம் சித்தேரியில் ஆய்வு செய்து, தற்போதுள்ள உண்மை நிலை, வருவாய் ஆவணங்களை ஆராய்ந்து, ஏரியில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள், அதை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஏரி மாசடையாமல் இருக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும். அங்குள்ள நீரை ஆய்வு செய்து, மாசு ஏற்பட்டிருந்தால், அதை தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016 செயலாக்கம், கழிவுநீர் மேலாண்மை குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கு மீதான அடுத்தவிசாரணை செப்டம்பர் 10-ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x