Published : 07 Aug 2020 07:06 AM
Last Updated : 07 Aug 2020 07:06 AM

மூடியுள்ள கோயில் ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை; நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மூடப்பட்டுள்ள கோயில்களில் பணியாற்றும் 6,664 பேருக்கு உதவித்தொகையாக ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்து அறநிலையத் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான ஆர்.ஆர். கோபால்ஜி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கரோனா ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை நம்பி வாழ்க்கை நடத்தும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள்,ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்களுக்கு மாதம் ரூ. 7,500 உதவித்தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், வெங்கடேசன், “கரோனா ஊடரங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களைச் சேர்ந்த 12 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் முதல் மே வரை 2 மாதங்களுக்கு மட்டும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. மே 16 - ஜூன் 30 காலகட்டத்துக்கு ரூ.1,500 வழங்க அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 1 முதல் கிராமப்புற கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டுள்ள கோயில்களில் பணியாற்றும் 6,664 பேருக்கு உதவித்தொகையாக ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x