Published : 07 Aug 2020 07:03 AM
Last Updated : 07 Aug 2020 07:03 AM

கரோனா மருந்து என்று கூறி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கரோனாவை குணப்படுத்துவதாக கூறி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவான்மியூரை சேர்ந்த ஆருத்ரா இன்ஜினீயர்ஸ் என்ற தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை ‘கரோனில் 92பி’, ‘கரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயர்களில் தயாரித்து வருகிறோம். இதற்கான வணிகச் சின்னத்தையும் முறையாக பதிவு செய்துள்ளோம். இந்த சின்னம் வரும் 2027-ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு ‘கரோனில்’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் எங்கள் வணிகச் சின்னத்தின் பெயரில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. ‘கரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘கரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்த தடையை நீக்கக் கோரி 2 நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

‘கரோனில்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு நிறுவனம் வணிகச் சின்னத்தை பதிவு செய்துள்ள நிலையில், அதே பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உறுதி செய்யப்படுகிறது.

மேலும் ரூ.10 ஆயிரம் கோடி நிறுவனம் என்று கூறும் பதஞ்சலி நிறுவனம், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி, லாபம் ஈட்ட முயன்றுள்ளது. அது எதிர்ப்பு சக்தி மிகுந்த மருந்துதானே தவிர, கரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. அதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில் ரூ.5 லட்சத்தை சென்னைஅடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், ரூ.5 லட்சத்தை அரும்பாக்கம் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் வரும் 21-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x