Published : 07 Aug 2020 07:01 AM
Last Updated : 07 Aug 2020 07:01 AM

ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஒளிந்து கொள்ளும் எஸ்.வி.சேகருக்கு பதிலளிக்க அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி விளக்கம் 

சென்னை 

‘ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஒளிந்துகொள்ளும் எஸ்.வி.சேகருக்கு பதிலளிக்க அவசியம் இல்லை’ என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘முதல்வர் பழனிசாமி நன்கு இந்தி பேசுவார் என்று டெல்லி வந்து போகும்போது உடன் வந்தவர்கள் கூறினர். அவர் எங்கு இந்தி படித்தார் என்று தெரியவில்லை. முதல்வர் இந்தி படிக்கலாம். அரசு பள்ளியில் இந்தி படிக்கக் கூடாது. திமுகவின் விஷயங்களை அதிமுக ஏன் தூக்கிப்பிடிக்கிறது என்று தெரியவில்லை. அதிமுக உருப்பட வேண்டும் என்றால், அக்கட்சிக் கொடியில் அண்ணாதுரை படத்தை எடுத்துவிட்டு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தை வைத்து அம்மா திராவிட முன்னேற்றக்கழகம் என்று வைத்துக்கொண்டால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். பிராமணர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறீர்கள்’’ என்று பேசியிருந்தார்.

நேற்று முன்தினம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அவர் எந்த கொடியை காட்டி வாக்கு பெற்றார்? அதிமுக எம்எல்ஏவாக 5 ஆண்டுகள் பெற்ற ஊதியத்தை திரும்ப அரசுக்கு செலுத்துவாரா? ஓய்வூதியம் வேண்டாம் என்பாரா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், எஸ்.வி.சேகர் பேச்சு குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் நேற்று கேட்டதற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

எங்களுக்கு இந்தி தெரியும் என்பது அவருக்கு எப்படி தெரிந்தது. அவருக்கு ஞானோதயம் எப்படி ஏற்பட்டது. அவர் முதலில் எந்த கட்சி? பாஜக என்றால் பிரச்சாரத்துக்கு அவர் வரவே இல்லையே. அதுமட்டுமல்ல, முதலில் அவர் அதிமுகவில்தானே இருந்தார். அதிமுகவைதானே புகழ்ந்து பேசினார். கட்சிக்கு ஒத்துழைப்பு தராததால்தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்
பட்டார். வெளியேறினார். ஏதாவது பேசுவார். வழக்கு வந்தால் போய் ஒளிந்துகொள்வார். அவருக்கெல்லாம் பதிலளிக்க அவசியம் இல்லை.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x