

மதுராந்தகம் வட்டம், வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கொளம்பாக்கம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த 5 வாரங்களாக நூறு நாள் வேலை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
எனவே, கிராம மக்கள் போராட்டம் நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் ஒரு வாரம் மட்டும் பணி வழங்கப்பட்டு மீண்டும் அந்தப் பகுதியில் பணி வழங்கப்படவில்லை.
இதனால் ஆந்திரம் அடைந்த கிராம மக்கள் படாளம் - வேடந்தாங்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன், மதுராந்தகம் வட்டச் செயலர் சசிகுமார், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளர் கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்துக்குள் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.