

அமோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லெபனான் நாட்டு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
போலீஸார், தீயணைப்பு துறையினர், வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். குவாரிகள், உரக் கடைகள் உரக் கிடங்குகள் மற்றும் சந்தேகத்துக்குரிய இடங்களில் தீவிர சோதனைகள் நடந்துவருகின்றன. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் சோதனை நடந்தன. இன்றும் தொடர்ந்து சோதனை நடக்கிறது.
அமோனியம் நைட்ரேட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நாக்பூரில் உள்ள மத்திய முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். பின்னர் அந்தந்த மாநிலத்தில் உள்ள முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட்டில், கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் எங்கு சென்றது என்பதுகணக்கில் இல்லை. விவசாயத்தேவைக்காக அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்வதாக கூறி, அதை குவாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.