

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 2-வது நினைவு தினம் இன்றுஅனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் இப்போட்டியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12 மணி அளவில் தொடங்கிவைத்தார். இன்று (7-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த மாரத்தானில் பங்கேற்கலாம்.
உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் (www.kalaignarmarathon.com) வழியாக பதிவு செய்து, தங்கள் வசதிக்கேற்ப வீட்டு மாடி, தோட்டம், ட்ரெட்மில் என எந்த இடத்திலும் ஓடலாம். இதில் பங்கேற்பவர்களுக்கான சான்றிதழ், இணையம் மூலமாகவும், வெற்றி பெறுவோருக்கான பதக்கம், அஞ்சல்மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனைபடைத்துவரும் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ இப்போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘உலகமே கரோனா அச்சத்திலும், பாதிப்பிலும் ஆழ்ந்துள்ளது. கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு மக்கள் மத்தியில் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையவழி மாரத்தானுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உட்பட 18-க்கும் மேற்பட்டநாடுகளில் இருந்து இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிவு கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. அதன்மூலம் கிடைக்கும் தொகையை திரட்டி, கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது’’ என்றார்.