Published : 07 Aug 2020 06:36 AM
Last Updated : 07 Aug 2020 06:36 AM

கலந்தாய்வில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகளின் கட்ஆப் விவரங்கள் வெளியீடு: இதுவரை 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

சென்னை

பொறியியல் கல்லூரிகளின் 3 ஆண்டுகால கட்ஆப் விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு 1.7 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பரில் நடைபெறவுள்ளது.

மாணவர்கள் ஆர்வம்

கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு பொறியியல் படிப்புகளில்சேர மாணவர்கள் அதிக அளவில்விண்ணப்பித்துள்ளனர். கடந்த2019-ம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 33,116மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதேநேரம் நடப்பு ஆண்டில் இதுவரை (நேற்று மாலை நிலவரப்படி) 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.12 லட்சம்பேர் விண்ணப்பக் கட்டணம்செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்கஆகஸ்ட் 16 வரை அவகாசம்இருப்பதால்1.60 லட்சம் பேர் வரைவிண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே கலந்தாய்வில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகளின் கட்ஆப் மற்றும் தரவரிசை விவரங்களை உயர்கல்வித் துறைவெளியிடுவது வழக்கம். இதன்மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரிகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலால் கலந்தாய்வு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடப்பு ஆண்டுகல்லூரிகளின் கட்ஆப் விவரங்களை வழக்கத்தைவிட முன்னதாக வெளியிட மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதையேற்று கல்லூரிகளின் 3 ஆண்டுகால கட்ஆப் மதிப்பெண் விவரங்களை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் பாடவாரியாக வெளியிட்டுள்ளது. அவற்றை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x