Published : 06 Aug 2020 08:13 PM
Last Updated : 06 Aug 2020 08:13 PM

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி: பார்வை மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி, பாலநாகேந்திரனுக்கு  பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனைப்படைத்த பார்வை மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி, பாலநாகேந்திரன் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கராத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருவாறு:

“நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்திலிருந்து மதுரையைச் சார்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இரு பார்வை மாற்றுத்திறனாளிகள் வெற்றிபெற்றுள்ளனர்.

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிருந்தா கராத், வெற்றிபெற்றுள்ள இந்த இரு பார்வை மாற்றுத்திறனாளிகளையும் தொலைபேசியில் தனித்தனியே தொடர்புகொண்டு வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,

பார்வை மாற்றுத்திறனாளிகளின் விடாமுயற்சிகளுக்கும், தன்னம்பிக்கைக்கும் தனது இதயபூர்வ பாராட்டுதல்களை தெரிவிப்பதாக பிருந்தா கராத் கூறியுள்ளதோடு, அவர்கள் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குவதற்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்திய வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு வரை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் பதவிகளில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பிருந்தா கராத் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அவர்களின் உரிமைகள் குறித்து பேசியதோடு, 2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணிவழங்கப்படாமல் இருந்த பார்வை மாற்றுத்திறனாளிகளை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அழைத்து சென்று அவர்களுக்கு பணி வழங்கிட கோரிக்கை வைத்தார்.

அதற்கு பின்னரே பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x