தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம்; நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம்; நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் அவாலாஞ்சியில் வரலாறு காணாத அளவுக்கு 58 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் காரணமாக நீலகிரி, கோவை, தேனிப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்து உள்ளதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிக மழையும் கோவை தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி 58 செ.மீ., கூடலூர் பஜார் 33 செ.மீ., மேல் பவானி 32 செ.மீ. மேல் கூடலூர் 31 செ.மீ., நடுவட்டம் 23 செ.மீ., தேவாலா 22 செ.மீ., கிலேன் மோர்கன் 20 செ.மீ., பந்தலூர், ஆரிசன் எஸ்டேட் தலா 18 செ.மீ., எமரால்டு 17 செ.மீ., கோவை மாவட்டத்தில் உள்ள சின்னகல்லார், சோலையார் தலா 11 செ.மீ., சின்கோனா 10 செ.மீ., வால்பாறை 7 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்ட் 6 அன்று குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த/சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 6 முதல் 8 வரை கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் கோவா, மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 6 முதல் 10 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 7 இரவு 11-30 மணி வரை கடல் அலை 3.5 மீட்டர் முதல் 4.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in