

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகக் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயப் பெருவிழா கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது.
கோவில்பட்டி அருகே பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா ஆலயப் பெருவிழா ஆண்டுதோறும் ஆக.6-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆக.15-ம் தேதி அதிகாலை தேரடி திருப்பலி கும்பிடு சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளதால், இன்று நடைபெற இருந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயப் பெருவிழா கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பரலோக மாதா ஆலய வளாகத்தில் புதிதாக ரூ.1.25 கோடி செலவில் கட்டப்பட்ட குருக்கள் இல்லத்தை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி ஜெபித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மறைமாவட்டப் பொருளாளர் எஸ்.ஏ.அந்தோணிசாமி, பரலோக மாதா ஆலயத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பங்குத்தந்தை அருள் அம்புரோஸ், பங்குத்தந்தை எஸ்.எம்.அருள் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் ச. அந்தோணிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் புனித பரலோக மாதா ஆலய பெருவிழா இந்த ஆண்டு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விமரிசையாக நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். ஆலயத்தில் குருக்கள் திருப்பலி நடத்துவார்கள். இதனை மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம். யாரும் கோயிலுக்கு வர வேண்டாம்.
அரசு உத்தரவுப்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளி என்பது நாம் மற்றவர்களின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டும். அதனால் இந்த ஆண்டு பெருவிழாவில் கொடியேற்றப்பட மாட்டாது. தேர் இழுக்கப்பட மாட்டாது. 10 நாட்கள் திருப்பலிகள் மட்டும் நிறைவேற்றப்படும். மற்ற செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன'' என்றார் அவர்.