

டாஸ்மாக் வருமானத்தைத் திட்டப்பணிகளுக்குச் செலவிட்டாலும், மதுபான விற்பனையில் பொதுநலன் இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை செயல்படத் தடை விதித்துள்ளது.
ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி, அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த டி.கோபால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''பெரியகுளம்- ஆண்டிப்பட்டி சாலையில் அன்னை சத்யா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தச் சாலையில் 2 டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் இரு கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி இங்குள்ள பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை திறந்துள்ளனர். இது சட்டவிரோதமானது. எனவே பசுமை வீட்டில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும், அதுவரை டாஸ்மாக் கடையை மூடவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், ''மது விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் திட்டப்பணிகளை நிறைவேற்றினாலும், மது விற்பனையில் பொதுநலன் இல்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் சுத்தம், சுகாதாரம் பராமரிக்க வேண்டும் எனப் பல்வேறு வழக்குகளில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே, தேனி ஆட்சியர் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுத்தம், சுகாதாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்படுவதில்லை. எவ்வளவுக்கு வேண்டுமானாலும் மதுபானங்களை விற்கலாம் என்கிற நிலைதான் உள்ளது. பில் வழங்குவதில்லை. இது தொடர்பாகவும், பசுமைத் திட்ட வீட்டில் டாஸ்மாக் கடை செயல்படுவது தொடர்பாகவும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை செயல்படத் தடை விதிக்கப்படுகிறது'' என்று தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.