

உதகை நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சிலருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 5 நாட்கள் தற்காலிகமாக மார்க்கெட் மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கிராமங்களில் திருமண மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களால் தொற்று அதிகரித்து வருகிறது. மூன்றாம் நிலை தொடர்பாளர்களுக்குத் தற்போது தொற்று ஏற்பட்டு வருவது சுகாதாரப் பணியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 897 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் 7,31 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 164 நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உதகை நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமதுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 20 வியாபாரிகளுக்கு இன்று (ஆக.6) கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால், தற்காலிகமாக நகராட்சி மார்க்கெட் மூடப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரஸ்வதி கூறும் போது, "உதகை நகராட்சி மார்க்கெட்டில் சில வியாபாரிகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகள் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்க பரிசீலித்து வருகிறோம்" என்றார்.