

நாகப்பட்டினம் மற்றும் நாகூர் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதர நோயாளிகளின் நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பணி செய்ய வேண்டிய மருத்துவர்கள், சென்னையில் ‘கோவிட் 19’ சிகிச்சைப் பணிகளுக்குச் சென்றுவிட்டதால் இங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு பணியாற்ற வேண்டிய 35 மருத்துவர்கள், சென்னையில் பணிபுரிவதால் பல நெருக்கடிகளை இம்மருத்துவமனை சந்திக்கிறது.
சென்னையின் நெருக்கடியான சூழலை உணரும் அதே நேரம், இங்குள்ள நிலவரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதுபோல் நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூரில் இயங்கும் நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 4 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு, அதிலும் தற்போது இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர் இல்லை. இந்த மருத்துவமனைகளுக்குப் போதிய மருத்துவர்கள் இருந்தால் மாவட்டம் முழுதும் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தாங்கள் இவ்விஷயத்தில் உரிய கவனமெடுத்து, இவ்விடங்களில் போதிய மருத்துவர்கள் பணியாற்ற உரிய மற்றும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது கடிதத்தில் கோரியுள்ளார்.