

இந்தியாவிலேயே உயிர்த்தியாகம் செய்த காவல்துறையினருக்கு 40 ஆண்டுகளாக 'வீர வணக்கம்' செலுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முன்னாள் டிஜிபி தேவராம் புகழாரம் சூடினார்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்கள் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட் பிடியில் சிக்கியிருந்தது. 1978-ம் ஆண்டு திருப்பத்தூரை சேர்ந்த அப்பாசாமி ரெட்டியார், பொன்னேரியை சேர்ந்த கேசவன், கதிரம்பட்டியை சேர்ந்த நடேசன் ஆகியோர் நக்சைலட் தாக்குதலுக்கு உயிரிழந்தனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் தலைமையில் சிவலிங்கம், மகாலிங்கம், பழனி உள்ளிட்டோர் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்து, 3 மாவட்டங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுற்றித்திரிந்த 4 பேரை ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளராக அப்போது பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் பிடிப்பட்டவர்களில் ஒருவர் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய புள்ளியான, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த சிவலிங்கம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல் துறை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் வெடிகுண்டு வீசப்பட்டு ஆய்வாளர் பழனிச்சாமி, காவலர்கள் முருகேசன், ஏசுதாஸ் மற்றும் ஆதிகேசவலு ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நக்சல் அமைப்பைச் சேர்ந்த சிவலிங்கம் தப்பியோடினார்.
நக்சலைட் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த காவல் துறையினருக்குத் திருப்பத்தூரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி 1980-ம் ஆண்டு நடைபெற்றது. இதில், அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் பங்கேற்று, சவ ஊர்வலத்துடன் நடந்து சென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி உயிர்த்தியாகம் செய்த காவல் துறையினருக்கு திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் 'வீர வணக்கம்' செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 40-வது நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் இன்று (ஆக.6) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வேலூர் சரக டிஐஜி காமினி தலைமை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, உயர் நீத்த காவல் துறையினருக்கு 28 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமைச்சர் கே.சி.வீரமணி, டிஐஜி காமினி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் டிஜிபி தேவாரம் காணொலி காட்சி மூலம் பேசியதாவது: .
"திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 'வீர வணக்கம்' நிகழ்ச்சியில் தொடர்ந்து 38 ஆண்டுகள் நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வர முடியவில்லை. தற்போது கரோனா ஊரடங்கு இருப்பதால் வர முடியவில்லை. எனவே, காணொலி காட்சி மூலம் இந்நிகழ்ச்சியை காண விரும்பினேன். அதற்கான ஏற்பாடுகளை செய்த திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு என் பாராட்டுகள். இந்தியாவிலேயே, உயிர்நீத்த காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக 40 ஆண்டுகளாக வீர வணக்கம் நிகழ்ச்சியை நடத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
1981-ம் ஆண்டு 'வீர வணக்க' நாள் அனுசரிக்கும்போது காவல் துறையைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதன்பிறகு, அரசு துறை உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் கலந்துகொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தி வருவது பெருமைக்குரியதாகும்.
கடந்த 1979-ம் ஆண்டு நக்சல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் ஒத்துழைப்பு அளித்தனர். அதற்காக, நக்சல் கும்பல் பொதுமக்கள் சிலரை கொலை செய்தனர். நக்சல் வேட்டையில் காவல்துறையினருக்கு பெரும் உதவியாக இருந்த நாட்றாம்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அன்பழகனையும் நக்சலைட்டுகள் 2 முறை கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அதை காவல்துறையினர் முறியடித்தனர்.
தமிழகத்தில் நக்சல் ஊடுருவல் தற்போது இல்லை. 'க்யூ' பிரிவு காவல்துறையினர் நக்சலைட் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஒரு சிலர் தவிர காவல்துறையினர் தங்களது பணிகளை சிறப்பாக செய்கின்றனர். கரோனா ஊரடங்கில் காவல் துறையினரின் பணி மக்கத்தானது"
இவ்வாறு அவர் பேசினார்.