Last Updated : 06 Aug, 2020 02:59 PM

 

Published : 06 Aug 2020 02:59 PM
Last Updated : 06 Aug 2020 02:59 PM

30 ஆண்டுகளில் நான்காவது எம்எல்ஏ; திமுக எம்எல்ஏக்களின் அதிருப்தி வரலாறு!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம், பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார். பாஜகவில் தான் இணையவில்லை என்று அவர் சொன்னாலும், அவருடைய செயல்களும் பேச்சுகளும் அதை எல்லோருக்கும் படம்போட்டுக் காட்டுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் 'சிட்டிங்' திமுக எம்எல்ஏக்கள் முகாம் மாறுவது அல்லது அதிருப்தி காரணமாக முரண்பட்டு நிற்பது இது நான்காவது முறையாகும்.

வழக்கமாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட்டு கிடைக்காத விரக்தியில் கட்சி மாறிய எம்எல்ஏக்கள் திமுகவில் உண்டு. இதேபோல, சீட்டு கிடைக்காத ஆத்திரத்தில் கட்சி மாறிய திமுக நிர்வாகிகளும் நிறையப் பேர் உண்டு.

ஆனால், தேர்தல் இல்லாத நேரத்தில் கருத்து வேறுபாடு அல்லது அதிருப்தி காரணமாகக் கட்சி மாறிய அல்லது முரண்பட்டு நின்ற எம்எல்ஏக்கள் மிகவும் குறைவுதான். அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளில் தேர்தல் அல்லாத காலத்தில் மூன்று எம்எல்ஏக்கள் திமுகவிலிருந்து முகாம் மாறியிருக்கிறார்கள் அல்லது முரண்பட்டிருக்கிறார்கள். தற்போது நான்காவது முறையாக கு.க.செல்வம் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

1991-ம் ஆண்டு தேர்தலில் எழும்பூர், துறைமுகம் என இரு தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் செல்வராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1993-ம் ஆண்டு கட்சியை விட்டு வைகோ நீக்கப்பட்டபோது, அவர் பக்கம் நிர்வாகிகள் பலர் சென்றனர். அப்போது துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த செல்வராஜும் வைகோ பக்கம் சென்றார். திமுகவின் இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவர், வைகோ பக்கம் சென்றதால், சட்டப்பேரவையில் திமுகவில் செங்குத்துப் பிளவு என்று வைகோ வர்ணித்தார். உதயசூரியன் சின்னத்தை வைகோ கோரியபோது தேர்தல் ஆணையத்திலும் சட்டப்பேரவையில் செங்குத்துப் பிளவு என்பதை வைகோ குறிப்பிட்டார். அதற்கு அப்போது மூல காரணமாக விளங்கியவர் செல்வராஜ்.

இவரைப் போல அல்லாமல் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியிலும் கருத்து வேறுபாட்டாலும் திமுக எம்எல்ஏ ஒருவர் அதிமுக பக்கம் தாவினார். அவர், ராஜகண்ணப்பன். 2006-ம் ஆண்டில் இளையான்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராஜகண்ணப்பன். திமுக ஆட்சி அமைத்ததால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்கு பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கியது திமுக மேலிடம்.

இதனால், ராஜகண்ணப்பன் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும், பெரியகருப்பனுடன் கருத்து வேறுபாடும் இருந்து வந்தது. அந்த விரக்தியில், 2008-ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுக பக்கம் கரை ஒதுங்கினார் ராஜகண்ணப்பன். ஆளுங்கட்சி எம்எல்ஏவாக ராஜகண்ணப்பன் விலகியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. (2001-ம் ஆண்டில் இளையான்குடி தொகுதி ராஜகண்ணப்பனுக்கு திமுக வழங்கியதால், அந்த அதிருப்தியில் அதிமுகவுக்கு தமிழ்க்குடிமகன் சென்றது தனிக்கதை).

ராஜகண்ணப்பன்: கோப்புப்படம்

கடந்த 2011-ம் ஆண்டில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் பெரியசாமியின் அரசியலுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக பக்கம் சாய முயற்சிகளை மேற்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்எல்ஏ பதவியை இழந்த ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் போட்டியிட வசதியாக திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால், அவருடைய எந்த 'ஆக்‌ஷன்'களுக்கும் ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்த 'ரியாக்‌ஷனும்' வெளிப்படாததால், பின்னர் அப்படியே அமைதியாகி திமுகவில் சமாதானமானார் அனிதா ராதாகிருஷ்ணன்.

அனிதா ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்

தற்போது கிட்டத்தட்ட ராஜ கண்ணப்பனைப் போல விரக்தி காராணமாக கு.க.செல்வம், பாஜக பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சட்டப்பேரவையின் காலம் முடிய 8 மாதங்களே உள்ள நிலையில், திமுகவிலிருந்து விலகி நிற்கத் தொடங்கியிருக்கிறார் கு.க.செல்வம். மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத நிலையில் ஏற்பட்ட அதிருப்தியால் கு.க.செல்வத்துக்கு அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் திமுகவிலிருந்து மாற்று முகாம் அல்லது அதிருப்தி காரணமாக திமுகவில் எம்எல்ஏக்கள் முரண்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தது இவை மட்டுமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x