

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் அருகே புங்கவர்நத்தம் ஊராட்சி, சுப்பிரமணியபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''நடிகர் சங்கத் தேர்தல் வரும்போது, அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை நடத்தினால் போட்டியே இல்லாத நிலை உருவாகும் என வலியுறுத்தினோம். இதுவேதான் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும்.
நடிகர் சங்கத்தைப் போலவே தயாரிப்பாளர் சங்கமும் நீதிமன்றத்தை நாடியதால்தான் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் அல்லது நடிகர் சங்கம் என எதுவாக இருந்தாலும் அவர்கள் அமர்ந்து பேசி சுமுக முடிவுக்கு வருவதற்குத் தயாரானால், அதற்கு அரசு முழு ஒத்துழைப்புத் தரும்.
தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையில் தேவையெனில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வுக்கு நாங்கள் வழிவகுப்போம். எஸ்.வீ.சேகர் அதிமுகவில் இல்லை. அவர் நன்றி மறந்தவர். அவருக்கு அடையாளம் கொடுத்தது அதிமுகதான். எனவே நன்றி மறந்தவர்களுக்குப் பதில் சொல்வது எங்களைப் பொறுத்தவரை சரியாக இருக்காது'' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.