

அரசின் வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்தால் நோய்த் தொற்றைத் தடுத்து மீண்டும் இயல்புநிலைக்கு வரமுடியும், என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.6) காலை திண்டுக்கல் வருகை தந்தார். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்தும் வைத்தார்.
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் முதன்மைச் செயலாளர் கே.கோபால், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி, திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசியதாவது:
"ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம். மக்களை காப்பாற்றுவது தான் அரசின் கடமை. இதன் அடிப்படையில் தான் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவென்றும், பகலென்றும் பாராமல் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உரிய சிகிச்சையளித்து குணமடைய செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆகையால், மீண்டும் மீண்டும் பொதுமக்களை கேட்டுக்கொள்வதெல்லாம், அரசின் வழிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்தால் நோய் தொற்றைத் தடுத்து மீண்டும் இயல்புநிலைக்கு வர முடியும்.
தமிழகத்தில் தான் அதிகளவில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் தான் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறுகுறு, நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுவினருடன் கலந்தாய்வில் ஈடுபட்டார்.