Published : 06 Aug 2020 01:55 PM
Last Updated : 06 Aug 2020 01:55 PM

திமுக அரசிடம் பெற்ற ஊதியத்தை அமைச்சர் ஜெயக்குமார் திருப்பிக் கொடுப்பாரா?- எஸ்.வீ.சேகர் சிறப்புப் பேட்டி

அதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை எடுத்துவிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் போடவேண்டும் என்று பாஜகவின் எஸ்.வீ.சேகர் கொளுத்திப்போட்ட செய்திக்குச் சற்று காட்டமாகவே பதில் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார், “விளம்பரம் தேடுவதற்காக எஸ்.வீ. சேகர் எதையாவது பேசக்கூடாது. அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது அதற்காக அவர் பெற்ற ஊதியத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அரசு பென்ஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும்” என்றெல்லாம் பொங்கி வெடித்திருக்கிறார். இதற்கும் ட்விட்டரில் கூலாகப் பதில் சொன்ன சேகர், “ இதற்குப் போய் நண்பர் ஜெயக்குமார் இவ்வளவு கோபப்பட வேண்டி யதில்லை” என்கிறார்.

இந்த நிலையில், எஸ்.வீ.சேகருடன் ஒரு பேட்டி:

அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுக்க வேண்டும் என்று எதற்காகச் சொல்கிறீர்கள்?
திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர், மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றதன் மூலம் தான் ஓர் ஆன்மிக அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்திக் கொண்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சொன்னவர் எம்ஜிஆர். ஆனால், இந்த இரண்டு கொள்கைகளுமே அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரானவை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதற்காக, அண்ணாவின் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டார்களா என்ன? எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதாவும் தான் ஓர் ஆன்மிக அரசியல்வாதி என்பதை அப்பட்டமாகவே சொல்லி வந்தார். ஆனால், இன்றைக்கு இருக்கும் அதிமுக அரசில் என்ன நடக்கிறது? அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. ஆனால், திமுக கொள்கைகள் என்னவோ அதற்குத்தான் அதிமுக அரசு மதிப்பளிக்கிறது.

கருப்பர் கூட்டம் விவகாரத்தில்கூட ஏதோ பேருக்குத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும்... இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் சொல்லும் கருத்துகள் இரண்டு நாட்கள் கழித்து அப்படியே அரசின் அறிவிப்பாக வெளியாகிறது.

கருணாநிதியை எம்ஜிஆர் தீய சக்தி என்று சொன்னார். ஆனால், ஜெயலலிதா மறைந்த அடி மறப்பதற்குள் காவேரி மருத்துவனைக்குப் போய் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ரகசியக் கூட்டணி இருக்குமோ என்றுகூட மக்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்கிறது.

ஆக, மாறுபட்ட கொள்கைகளை உடைய திமுகவும் அதிமுகவும் ஒரே தலைவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு கிட்டத்தட்ட ஒரே விதமான சிந்தனைகளுடன் மக்கள் மத்தியில் வரும் போது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம்... ‘அ’மட்டும் தானா? என்ற கேள்வி வந்துவிடக்கூடாது இல்லையா... அதனால்தான் அண்ணாதுரை படத்தை எடுத்துவிட்டு மக்களுக்கு இன்னும் நன்கு பரிச்சயமான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் போடுங்கள் என்று சொல்கிறேன்.

நான் சொல்வதைக்கூட கேட்க வேண்டாம். அதிமுக கொடியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் போடலாமா வேண்டாமா என்று அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, துண்டுச் சீட்டு கொடுத்துக் கேட்கச் சொல்லுங்கள். அப்போது தெரியும் எத்தனை பேர் இதை ஆதரிக்கிறார்கள் என்று. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் நான் எனது கருத்தைச் சொன்னேன். இதற்கு ஏன் இவர்கள் இவ்வளவு கோபப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நானென்ன மோடியின் படத்தையா அதிமுக கொடியில் போடச் சொன்னேன்?

அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியை உடல் நலம் விசாரிக்கச் சென்றது அரசியல் நாகரிகம் கருதி. அதை எல்லாம் சர்ச்சையாக்குவது சரிதானா?
அன்றைக்கு அமைச்சர்கள் கருணாநிதியைச் சந்திக்கச் சென்றது அரசியல் நாகரிகம் என்றால் இன்றைக்கு கு.க.செல்வம் பாஜக தலைவரையும் மத்திய அமைச்சரையும் சந்தித்ததை மட்டும் ஏன் அரசியல் நாகரிகமாகப் பார்க்க மறுக்கின்றீர்கள்? தனது தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறுவதற்காகத்தானே செல்வம் மத்திய அமைச்சரைச் சந்தித்தார். அதற்காக அவரை எதற்காகக் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்?

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறாரே?
மும்மொழித் திட்டம் என்பது மத்திய அரசின் ஒரு சட்டம். இதை அமல்படுத்தலாமா வேண்டாமா என யாரிடமும் மத்திய அரசு கருத்துக் கேட்கவில்லை. யாராக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதேநேரத்தில், மத்திய அரசு யாரையும் இந்தி படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியையும் படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது.

ஏற்கெனவே தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 55 லட்சம் பேர் இந்தி படித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு மொழிக் கொள்கையைத்தான் அனுமதிப்போம் என்றால் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் அதைத்தானே அமல்படுத்தி இருக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் கட்சிகளின் எம்.பி.க்கள் தங்களது கொள்கைக்கு விரோதமாக நடக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கோட்டா சீட் பிடிக்க சிபாரிசுக் கடிதம் கொடுக்காமல் இருப்பார்களா? கொள்கை என்றால் ஒரே கொள்கையில் இருக்க வேண்டும். அதைவிட்டு வாரத்துக்கு வாரம் கலர் மாறுவது கொள்கை அரசியல் இல்லை.

விளம்பரத்திற்காக எஸ்.வீ.சேகர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே?
எனக்கு எதற்கு விளம்பரம்? வாரத்தில் மூன்று நாட்கள் ஏதாவது ஒரு சேனலில் நான் நடித்த படம் ஓடுகிறது. அந்த விளம்பரம் போதாதா எனக்கு? ஜெயக்குமாருக்குப் பேசுவதற்கு பொருள் கிடைக்கவில்லை. அதனால் என்னைப் பற்றி ஏதேதோ பேசியிருக்கிறார். அவர்தான் என்னை விளம்பரப்படுத்த முயற்சிப்பதாக நான் நினைக்கிறேன்.

அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது அதற்காகப் பெற்ற ஊதியத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அரசு பென்ஷனை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் உங்களுக்கு எதிராக வேகப்பட்டிருக்கிறாரே ஜெயக்குமார்?
அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது என்னுடைய உழைப்புக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்தது. நான் ஒன்றும் அதிமுகவிடம் வவுச்சர் கொடுத்து சம்பளம் வாங்கவில்லை. அரசாங்கம் எனக்குக் கொடுத்த ஊதியம் அது. அதை நான் எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்? அப்படிப் பார்த்தால் திமுக ஆட்சியிலும் எம்எல்ஏவாக இருந்த ஜெயக்குமார் அப்போது பெற்ற ஊதியத்தையும் சலுகைகளையும் திருப்பிக் கொடுப்பாரா?

கு.க.செல்வம் பாஜகவில் சேரப் போகிறாராமே?
அரசியிலில் ஒருவர் மீது ஒரு புள்ளி வைத்துவிட்டால் அந்த நபரை வெளியில் அனுப்பும் வரை ஓயமாட்டார்கள். இப்படித்தான், 2008 ஆகஸ்டில் நானும் அனிதா ராதாகிருஷ்ணனும் திமுகவில் இணையப் போவதாக புள்ளி வைத்தார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் சேர்ந்தது என்னவோ உண்மை. ஆனால், கடைசி வரை நான் திமுகவுக்குப் போகவில்லை.

ஆனால், நான் திமுகவுக்குப் போகப்போவதாகப் புள்ளி வைத்து என்னை அதிமுகவிலிருந்து விலக்க வைத்தார்கள். ஆனால், நான் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் படம் இன்னும் என் வீட்டில் இருக்கிறது. நாளைக்கே கு.க.செல்வம் நிரந்தரமாகத் திமுகவை விட்டு நீக்கப்பட்டால் அவரது வீட்டில் ஸ்டாலின் படம் இருக்குமா என்று பாருங்கள்.

உங்கள் கட்சியில்கூட நயினார் நாகேந்திரன் மிகவும் வருத்தத்தில் இருப்பது போல் தெரிகிறதே?
வருத்தங்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கத்தான் செய்யும். நாகேந்திரன் மாநில பாஜக தலைவராக வர வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. எனக்குக்கூட அந்த வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் அவருக்கு இருக்கலாம். எங்களைப் போன்றவர்களைக் கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மைதான். என்னைப் பொறுத்தவரை என்னைப் பயன்படுத்திக் கொண்டால் கட்சிக்கு நல்லது; இல்லாவிட்டாலும் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x