

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறியுள்ள மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.6) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பதில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கையை அனுமதிக்காது என தமிழ்நாடு அரசின் முதல்வர் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
மத்திய அரசு அமலாக்கத் துடிக்கும் புதிய கல்விக் கொள்கையின் தீய விளைவுகளை எதிர்த்து குரல் கொடுத்த தமிழக மக்களின் உணர்களுக்கு மதிப்பளித்தும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும் தமிழ்நாடு அரசு இருமொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என அறிவித்திருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறியுள்ள மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என முதல்வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.