

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின்போது காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து அனுப்பப்பட்ட கருங்காலி மரத்தாலான சங்கும், யந்திரமும் சிலையின் பீடம் அமைய உள்ள இடத்தின் கீழ் வைக்கப்பட்டன.
அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை சுமுகமாக தீர காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பல சமய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து, அவரது ஜெயந்தியும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையும் ஒரேநாளில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பூஜைக்காக சங்கர மடத்தில் இருந்து பூஜைப் பொருட்கள்,தங்கம் வெள்ளிக் காசுகள், கலசம், பட்டுத் துணி உள்ளிட்டவை அயோத்தி எடுத்துச் செல்லப்பட்டுஉள்ளன. ராமர், விநாயகருடன் கூடிய ஒரு புகைப்படமும் அனுப்பப்பட்டது. இதனுடன் காஞ்சிபுரம் ஸ்ரீசங்குபாணி விநாயகர் கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்ட கருங்காலி மரத்தாலான சங்கு எனப்படும் ஸ்தூபியை போன்ற அமைப்பு, யந்திரம் ஆகியவையும் அனுப்பப்பட்டன.
இந்த சங்கும், யந்திரமும் அயோத்தி ராமர் கோயிலில் பீடம் அமைய உள்ள இடத்தின் கீழ் பூமி பூஜையின்போது வைக்கப்பட்டன. இதன் மீது பீடம் அமைக்கப்பட்டு இதன் மேல்தான் கருவறை சிலை அமையும் என்று சங்கர மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சங்கர மடத்தில் இருந்து அனுப்பப்பட்ட படமும் கோயிலில் வைக்கப்பட உள்ளது.
ராமர் கோயிலின் கருவறை அமைய உள்ள இடத்தில் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து அனுப்பப்பட்ட சங்கும், யந்திரமும் வைக்கப்பட்டதற்கு மடத்தின் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.