

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்று தீவிரம் அடைந்துள்ளது. அதன் தாக்கத்தால் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 39.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மலைச் சரிவில் அதிகனமழையும், கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழையும் பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பலத்த வேகத்தில் காற்று வீசுவதால் மன்னார் வளைகுடா, மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம். கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதி களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.