

நீதிமன்றங்களை உரிய பாதுகாப்புடன் திறக்க வலியுறுத்தியும், வழக்கமான முறையில்செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுராந்தம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இளம் வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல் திருவள்ளூர்மாவட்டத்தில் பொன்னேரி மாவட்ட அமர்வு நீதிமன்றம்முன்பும், ஊத்துக்கோட்டை குற்றவியல், உரிமையியல் நடுவர்நீதிமன்றங்கள் முன்பும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கமான நடைமுறைப்படி உரிய பாதுகாப்புடன் நீதிமன்றங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய, மாநிலஅரசுகள் பார் கவுன்சிலுக்கு உரிய நிதி ஒதுக்கி வழக்கறிஞர்களுக்கு கரோனா கால நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கு ரூ.3 லட்சம்வட்டியில்லா கடன் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தின் மாவட்டச் செயலர் காளமேகம், மாவட்டப் பொருளாளர் கன்னியப்பன், மாவட்ட துணைத்தலைவர் தர்பாபு, மாவட்ட இணைச் செயலர் லெனின். பொன்னேரி லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் மாசிலாமணி, பொன்னேரி அட்வகேட் அசோசியேஷன் துணைத் தலைவர் இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.