Published : 05 Aug 2020 09:24 PM
Last Updated : 05 Aug 2020 09:24 PM

மதுரை மாவட்ட அதிமுகவை மூன்றாகப் பிரித்து நிர்வாகிகளுக்கு வாரி வழங்கப்பட்ட பொறுப்புகள்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கை கொடுக்குமா?

ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே. ராஜூ, வி.வி. ராஜன் செல்லப்பா (இடமிருந்து வலமாக)

மதுரை

மதுரை மாவட்ட அதிமுகவில் புறநகர் மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்ட பிறகு, தற்போது நிர்வாகிகளுக்கு பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் வரை மதுரை மாவட்ட அதிமுக அமைப்பு, மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் என இரண்டு மாவட்டமாகவே செயல்பட்டது.

இதில், மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும் இருந்தனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.

அவரும் வெற்றிப்பெற்று அமைச்சரானார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்த முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பாவுக்கு வழங்கப்படவில்லை.

அதனால், மேயராகவும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் கடந்த ஆட்சி முழுவதும் செல்வாக்குடன் இருந்த வி.வி.ராஜன்செல்லப்பா, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியுடன் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக மட்டுமே தொடர முடிந்தது.

ஆனாலும் மனம் தளராமல் அமைச்சர் பதவிக்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் ஜெயலலிதா மரணம், கட்சிப் பிரிவினை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது அமைச்சர் கனவு நிறைவேறாமல் போய்விட்டது.

இதற்கிடையில் அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கென்று, புறநகர் மதுரை மாவட்டத்தில் ஆதரவு நிர்வாகிகள் வட்டம் உருவானது.

அதனால், அதுவரை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா என இரு கோஷ்டியாக இருந்த மதுரை அதிமுக, அதன்பிறகு மூன்று கோஷ்டியாக மாறியது.

ஆர்.பி.உதயகுமார் மாநில ஜெ., பேரவை செயலாளராகவும், அமைச்சராக இருந்தாலும் அவரால் மாநகர மாவட்டச் செயலாளர்களாக இருந்த செல்லூர் கே.ராஜூ, புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா ஆகியோரைத் தாண்டி மதுரை மாவட்ட கட்சி நடவடிக்கைகளில் தலையிட முடியவில்லை.

தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழகப் பொறுப்புகளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அதனால், அவர் மாவட்டச் செயலாளர் பதவியை கேட்டு கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதற்கான வாய்ப்பு, கடந்த மக்களவைத்தேர்தலில் அவருக்கு கனிந்தது.

புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, தனது மகன் ராஜ் சத்தியனுக்கு மதுரை மக்களவைத்தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டார். அவருக்கு ‘சீட்’ கொடுக்க வேண்டுமென்றால் மதுரை புறநகர் மாவட்டத்தை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாக பிரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நியமிக்கப்படுவார் என்ற நிபந்தனையையும் கட்சி மேலிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

மகனுக்கு ‘சீட்’ பெறுவதற்கு விவி.ராஜன் செல்லப்பாவும், தன்னுடைய புறநகர் மாவட்டத்தை மேற்கு, கிழக்கு என பிரிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. கட்சி மேலிடம் கொடுத்த வாக்குறுதியின்படி ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியன் மதுரை மக்களவைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கையோடு அவரம் அவசரமாக மதுரை புறநகர் மாவட்டம், மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஆர்பி.உதயகுமாரும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக விவி.ராஜன் செல்லப்பாவும் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெ., பேரவை மாநில செயலாளர், புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி ஆகிய மூன்று பெரும் பதவிகளுடன் செல்வாக்கு பெற ஆரம்பித்தார்.

தற்போது மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதால், கட்சியில் அதிகமான நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்புகள் மட்டமில்லாது, எம்ஜிஆர் மன்றம், ஜெ., பேரவை, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, இலக்கிய அணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு உள்ளிட்ட அணி பொறுப்புகளும், ஒன்றிய, நகர மற்றும் பேரூர் அளவிலான பொறுப்புகளும் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அதனால், மதுரை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், ஆளும்கட்சி என்ற தோரணையுடன் கட்சிப்பொறுப்புகளுடன் முன்பை விட உற்சாகமாக கட்சிப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில் புறநகரை போல் மதுரை மாநகர அதிமுகவையும் 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்றும், புதிய மாவட்டத்திற்கு தன்னை மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் ஆர்பி.உதயகுமார் ஆதரவாளரான மதுரை தெற்கு எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய மாவட்டங்கள் பிரிப்பு, நிர்வாகிகளுக்கு வாரி வழங்கப்பட்ட பதவிகள் உள்ளிட்டவை வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கைகொடுக்கும் என கட்சி மேலிடம் நம்புகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x