Published : 05 Aug 2020 19:27 pm

Updated : 05 Aug 2020 19:28 pm

 

Published : 05 Aug 2020 07:27 PM
Last Updated : 05 Aug 2020 07:28 PM

திருமாவளவனின் மூத்த சகோதரி கரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்

thirumavalavan-s-sister-died-of-corona-virus
கு.பானுமதி: கோப்புப்படம்

சென்னை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி கரோனாவால் இன்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று (ஆக.5) வெளியிட்ட அறிக்கை:


"தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியும் லட்சோபலட்சம் விடுதலைச் சிறுத்தைகளின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த கு.பானுமதி இன்று காலை உயிர் நீத்தார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கு.பானுமதி, திருமாவளவனுக்கு மூத்த சகோதரியாக மட்டுமின்றி ஒரு தாயாகவும் இருந்து அன்பு பாராட்டியவர். தனது வாழ்வை திருமாவளவனின் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், 'நான் இறந்துபோனால் தம்பியை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் எனக்குப் பெரும் கவலை' என்று அவர் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டிருந்தது தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மனம் நெகிழச் செய்திருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது பாசம் வைத்திருந்தவர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் நன்றாகத் தேறி வந்தார். தானே உணவு உண்ணவும், உடற்பயிற்சிகளைச் செய்யவும் அவரால் இயன்றது. ஒரு சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் இன்று காலை எதிர்பாராமல் நேரிட்ட மாரடைப்பின் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

கு.பானுமதியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். அவருக்கு இளையராஜா, மாலதி, இசையமுதன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் எல்லோருமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

தலைவரை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொண்டர்களையும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய கு.பானுமதியின் திடீர் மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பேரிழப்பாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பானுமதிக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்சியின் கொடிகளை ஒரு வார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், துக்கம் கடைபிடிக்குமாறும் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவனின் சகோதரி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக

திருமாவளவன் தன் சகோதரி மீது எல்லையற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தார். அவர் சென்னையில் தங்கியிருக்கின்ற நாட்களில், அவருக்கு உணவு அனுப்புவதிலிருந்து அவரை தாயைப் போலவே பாசம் காட்டி ஊக்குவித்தவர் பானுமதி.

தலையில் இடி விழுந்ததைப் போல் இந்தச் சோக மரணம் தொல்.திருமாவளவனின் உள்ளத்தைச் சுக்குநூறாக்கிவிட்டது. ஆறுதலும், தேறுதலும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவருடைய கண்ணீரில் நானும் பங்கேற்கிறேன்.

திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் பொதுத் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அரும்பணி ஆற்றிவரும் திருமாவளவனுக்கு உற்ற துணையாக இருந்த ஒரே சகோதரி பானுமதியின் பிரிவு திருமாவளவனுக்கு மிகப்பெரும் சோகத்தையும் மன வருத்தத்தையும் தரக்கூடியது.

பானுமதியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் சகோதரியை இழந்து வாடும் திருமாவளவனுக்கும் உறவினர்கள் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் துயருடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் அன்புச் சகோதரி பானுமதி உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் திருமாவளவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தவறவிடாதீர்!


கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தொல்.திருமாவளவன்கு.பானுமதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிCorona virusThol thirumavalavanK banumathyVCKONE MINUTE NEWSCORONA TN

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author