

தமிழகத்தில் நாளொன்றுக்கும் 60 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களையும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பாளையங்கோட்டை காவலர் குடியிருப்பில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் நோய் தொற்று சராசரியாக 7 ஆயித்திலிருந்து 5 ஆயிரமாக குறைய தொடங்கியுள்ளது நல்ல அறிகுறியாக உள்ளது.
இறப்பு விகிதம் 1. 62 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க மருத்துவ கல்லூரிகளில் குழு அமைத்து 12 வகையான சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் 28 லட்சம் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 125 ஆய்வகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 1.18 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நோய் குறித்த அச்சமில்லாமல் பலர் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் முககவசம் அணிவதில் சுணக்கம் காணப்படுகிறது.
திருநெல்வேலி மாநகரில் 2500 தெருக்களில் 500 தெருக்களில் நோய் தொற்று கண்டறியபட்ட கட்டுப்பாட்டு பகுதியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 160 தெருக்களாக குறைந்துள்ளது.
14 தெருக்கள் மிகவும் கட்டுபடுத்தபட்ட பகுதியாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 1500 பேருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டுவந்தது. தற்போது 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2125 பேர் நோய் தொற்று கண்டறியபட்டவர்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் சிகிச்சைக்காக 2576 படுக்கைகள் தயாராக உள்ளன என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.