ஒரேவிதமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினரின் இரு வேறு வடிவப் போராட்டங்கள்

தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர்.
தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர்.
Updated on
1 min read

ஒரேவிதமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் இரு வேறு வடிவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த வருவாய் மற்றும் அரசின் பிற துறை அலுவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி உடனே அரசு வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், அரசாணை எண் 180-ன்படி, கருணைத் தொகை ரூ.2 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் அருகில் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ள அலுவலர்களுக்குத் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.

இதே கோரிக்கைகளுடன், "கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு அலுவலர்களுக்கு முழு செலவுத் தொகையையும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" ஆகிய கோரிக்கையை கூடுதலாக வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் இன்று (ஆக.5) போராட்டத்தில் ஈடுபட்டது.

இதன்படி, தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் இன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். மாநிலம் முழுவதும் அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களிலும் இன்றும், நாளையும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவதுடன், நாளை (ஆக.6) அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர்.
கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர்.

அதேவேளையில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினரோ, இன்றும், நாளையும் தற்செயல் விடுப்பு எடுப்பதுடன், இன்று ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 140 பேர் உட்பட மாநிலம் முழுவதிலும் 12 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், திருச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் மாவட்டச் செயலாளர் கலைச்செழியன், மாவட்டப் பொருளாளர் சண்முகவேலன் மற்றும் வட்ட நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சங்கக் கட்டிட வாயிலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதம் இருந்ததாக சங்க நிர்வாகிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in