Last Updated : 05 Aug, 2020 05:42 PM

 

Published : 05 Aug 2020 05:42 PM
Last Updated : 05 Aug 2020 05:42 PM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான விதிகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான விதிகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உள்ளது. தஞ்சாவூர் தாலுகாவில் அச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனவெளி, சாத்தனூர் ஆகிய பகுதிகளிலும், பூதலூர் தாலுக்காவில் மகாராஜபுரம், புதகிரி, வானரங்குடி, கழுமங்கலம், கள்ளபெரம்பூர், கோவிலாடி, சுக்கொம்பார் ஆகிய பகுதிகளிலும் மணல் குவாரிகளில் நடைபெறுகின்றன.

இந்த குவாரிகளில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சென்னம்பூண்டி பகுதியில் அரசு அனுமதியுடன் மணல்குவாரி நடைபெறுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் எடுப்பதால் அதிக ஆழத்தில் பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் விழுந்து பலர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து, சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும், டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கவும், திருச்சென்னம்பூண்டி அரசு குவாரிக்கு தடை விதித்தும், மணல் கடத்தலுக்கு உதவும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு அது தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு இதுவரை விதிகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் எடுக்கப்படும் மணல் அரசு கட்டிடப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறதா? அல்லது தனியாருக்கு விற்கப்படுகிறதா? ஒரு யூனிட் மணல் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது? என்பது தெடார்பாக அரசுத் தரப்பில் உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x