கரோனா ஊரடங்கு காலத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு; முதல்வர் தலையிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊரடங்கு காலத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுவதாகப் புகார் வரும் நிலையில், இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தலையிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.5) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ.15 ஆயிரத்திற்குப் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல், சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளைக்கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் தேவைகளைச் சமாளிப்பதற்காக வேறு எங்கும் வேலைக்குச் செல்ல முடியாது என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம்.

இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு வாழ்வாதாரமின்றி சிரமப்படும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அதேபோல், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கும் முதல்வர் அறிவுறுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in