

மதுரையில் கரோனா குறைந்தாலும், பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
முதல்வர் கே.பழனிசாமி நாளை மதுரைக்கு வருகிறார். அவரது வருகை குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் ஜெ.இராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
"மதுரை மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக உச்சநிலையிலேயே இருந்த கரோனா வைரஸின் தாக்கம் ஆறுதல் தரக்கூடிய வகையிலே படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.
தினமும் சராசரியாக 400 பேருக்கு தொற்று வந்துகொண்டிருந்த நிலையில் படிப்படியாக குறைந்து நேற்று 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அதே 3500 என்ற எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது. நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது.
முதல்வர் கே.பழனிசாமி இன்று சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முடிவுற்றப் பணிகளை துவக்கிவைத்தும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு மதியம் மதுரை மாவட்டம் வருகிறார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவுற்றத் திட்டப்பணிகளை துவக்கிவைத்தும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார்கள். பின்னர் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:
முதல்வர் கே.பழனிச்சாமி நாளை மதுரையில் மொத்தம் ரூ.326.10 கோடியில் நலத்திட்டப் பணிகள் மற்றும் ரூ.21.56 கோடியில் முடிவுற்றப் பணிகளை தனது பொற்கரங்களால் திறந்துவைத்து வழங்க உள்ளார்.
நலிந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழிலதிபர்களை சந்திப்பதுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரைகளையும் வழங்க உள்ளார்.
40 ஆண்டு கால சிரமத்தைப் போக்கும் வகையில் மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் குடிநீர் கிடைப்பதற்காக லோயர் கேம்ப்லிருந்து இரும்பு பைப் மூலமாக 1,254 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டு வருவதற்கு 3 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை பற்றியும் ஆலோசிக்க உள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.