

கரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் அரசு செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகர்ப்புறங்களில் நோய்த்தொற்று பரவும் வேகம் அதிகமாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளபடி நிலையான மருந்து மற்றும் தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் மட்டுமே நோய் த்தொற்றிலிருந்து பாதுகாக்க அடிப்படையான ஒன்று.
பொதுமக்கள் முககவசங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதாலும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் 92 ஆயிரம் மாதிரிகள் ரத்தப் பரிசோதனை எடுக்கும் திறன் உள்ளது.
அதில் 80 சதவீதம் முழுமையான பரிசோதனை முடிவுகளை பெற முடிகிறது. இதில் தற்போது வரை 60 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்று எண்ணிக்கை அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் பரிசோதனை செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதது" என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.