தென்காசியில் விற்பனை இல்லாததால் மண்பாண்டங்கள் தேக்கம்: ஏற்றுமதிக்கு வழிவகுக்க தொழிலாளர்கள் கோரிக்கை 

தென்காசியில் விற்பனை இல்லாததால் மண்பாண்டங்கள் தேக்கம்: ஏற்றுமதிக்கு வழிவகுக்க தொழிலாளர்கள் கோரிக்கை 
Updated on
1 min read

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து தென்காசி மாவட்டத்தில் மண்பாண்டங்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மண் பானைகள், அடுப்புகள், அகல் விளக்குகள், பூந்தொட்டிகள், சிலைகள், அழகு பொருட்கள் உட்பட 24 வகையான பொருட்களை இவர்கள் தயாரிக்கின்றனர்.

கடின உழைப்பு, நுணுக்கமான வேலைப்பாடு இருந்தால்தான் நேர்த்தியான முறையில் மண்பாண்டங்களை உருவாக்க முடியும். இளைய தலைமுறையினரிடம் மண்பாண்ட தொழிலில் ஆர்வம் இல்லாததால் இத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கிடையே கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மண்பாண்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேன்பொத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி லெட்சுமணன் கூறும்போது, “தேன்பொத்தை பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மண்பாண்டங்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

சந்தைகள் செயல்படாததாலும், கோயில்களில் விழாக்கள் நடைபெறாததாலும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேன்பொத்தை பகுதியில் மட்டும் 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மண்பாண்டங்கள் தேக்கமடைந்துள்ளன.

நவீனங்கள் வந்தாலும் பாரம்பரியத்தை விரும்புவோரால் மண்பாண்டங்களுக்கும் வரவேற்பு அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. மண்பாண்ட தொழிலை மேம்படுத்த வேண்டும்.

நவீன இயந்திரங்கள் மூலம் மண்பாண்டங்கள் தயாரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், மானியத்தில் நவீன இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும். ஏற்றுமதி தொழிலுக்கும் ஏற்பாடு செய்து தர வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் மண்பாண்ட தொழிலை மேம்படுத்தலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in