

திருச்சி கள்ளிக்குடியில் கட்டப்பட்ட காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் இன்று திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் மற்றும் காய்கறி கழிவுகளால் விளையும் சுகாதாரச் சீர்கேடு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் 19 வரிசை கட்டிடங்களில் 1,000 கடைகள் அடங்கிய காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017, செப்.5-ம் தேதி முதல்வர் பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.
இதனிடையே, 2018, ஜூன் 30-ம் தேதி மாநில அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கள்ளிக்குடியில் சில வணிகர்களைக் கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தனர். ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் ஆகாததால் சில மாதங்களிலேயே அவர்களும் காந்தி மார்க்கெட் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டனர்.
தொடர்ந்து, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தரைத்தளத்தில் மட்டும் இரு கடைகளுக்கு நடுவில் இருந்த சுவர் அகற்றப்பட்டு ஒரு கடையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தரைத் தளத்தில் இருந்த 500 கடைகள் 330 ஆகக் குறைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் செல்லவில்லை. இதனால், 830 கடைகளும் காலியாகவே இருந்து வந்தன.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 207 கடைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 623 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தைத் திறக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்ட மனித வளர் சங்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது அடுத்த விசாரணை விரைவில் வரவுள்ளது.
இந்தநிலையில், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட கடைகள் இன்று (ஆக.5) திறக்கப்பட்டன. வணிக வளாகத்தில் குளிர்ப்பதன கிடங்கு அருகே விவசாயிகளுக்கென இ5, இ6 பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட 207 கடைகளில், 52 குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட 104 கடைகளில் முதல் கட்டமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் ஆர்வலர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 15 கடைகள் இன்று திறக்கப்பட்டன.
திறப்பு விழாவில் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா மற்றும் வேளாண் விற்பனைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.